காணாமல் போனோருக்கான சர்வதேச தினம் உலகெங்கும் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது.
அந்தவகையில் இலங்கையிலும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் எட்டு மாவட்டங்களிலும் காணாமல் போனோரின் உறவினர்களினால் கவனயீர்ப்பு போடராட்டங்கள் நடத்தப்பட்டதுடன் தங்களுடைய உறவினர்களை மீட்டுத் தருமாறு கோரிக்ககைகள் அடங்கிய மகஜர்களும் கையளிக்கப்பட்டன.
வடக்கு கிழக்கைப் பொறுத்த வரையில் காணாமல் போனோரின் வரலாறு என்பது தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டத்துடன் சமாந்தரமான பயண அனுபத்தினைக் கொண்டுள்ளது. காலத்துக்கு காலம் பல்வேறு தரப்பினராலும் பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
80களின் நடுப் பகுதியில் புலிகளினால் ஏனைய இயக்கங்கள் தடை செய்யப்பட்ட போது, காணாமல்போன ஏராளமான இளைஞர்கள் – 80களின் இறுதிப் பகுதியில் இந்தியப் படையினருடன் சேர்ந்தியங்கிய ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற இயக்கங்களினால் தொண்டர் படைக்காக பிடிக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் புலிகள் என்ற சந்தேகத்தில் பிடிக்கப்பட்டவர்கள், அதேபோன்று, 90 களின் ஆரம்பத்தில் புலிகள் அமைப்பின் பிரதித் தலைவராக இருந்த மாத்தையா என்பவரின் தலைமையிலான ஒரு பிரிவினர் துரோகிகளாக்கப்பட்டதன் பின்னர் காணாமல் போனவர்கள் என்று ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளிளை இன்றும் அவர்களுடைய உறவினர்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு காலத்துக்கு காலம் எமது சமூகத்தின் இளைஞர் யுவதிகள் காணாமல் போனதன் தொடர்ச்சியாக யுத்தத்தின் இறுதிக்கட்டத்திலும் அயிரக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர். அதைவிட யுத்தம் நிறைவடைந்த பின்னர் இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் என்று ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளின் விடை தெரியாமல் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
எனவே காலத்திற்கு காலம் காணாமல் போன அனைவருக்கும் பரிகாரங்கள் காணப்பட வேண்டும். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
இவ்வாறான பின்னணியில் தான், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் காணாமல் போனோரின் உறவினர்களினால் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
இவ்வாறான போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்களின் உணர்வுகள் மதிக்கப்பட்ட வேண்டியவை – அவர்களின் எதிர்பார்ப்புக்கள் தீர்க்கப்பட வேண்டியவை.
அதேவேளை, வடக்கு கிழக்கு பிரதேசங்களில் காணாமல் போனவர்களின் பெயரினால் நடத்தப்பட்ட போராட்டங்கள் அரசியல் சக்திகள் சிலவற்றின் ஊடுருவலினால் திசை திருப்பட்டு, ஒருவிதமான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இழுத்துச் செல்லப்படுகின்றதோ என்ற சந்தேகம் நடுநிலையாளர்கள் மத்தியில் வலுவடைந்திருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இவ்வாறான போராட்டங்கள் ஒரு திசை நோக்கி நகர்த்தப்படுவதும், குறித்த நிகழ்ச்சி நிரலுக்குள் காணாமல்போனோரின் உறவினர்களில் ஒரு பகுதியினர் இழுபட்டுச் செல்வதும் போராட்டத்தின் கனதியை குறைப்பதாக அமைகின்றது என்பதை பாதிக்கப்பட்டவரக்ள் புரிந்து கொள்ள வேண்டும்.
அதேபோன்று பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் கொடுக்கின்ற அதேயளவு முக்கியத்துவத்தை அறிவுசார்ந்த சிந்தனைகளுக்கும் அளிக்க வேண்டும்.
மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானங்களும் வெளிப்படுத்துகின்ற கோஷங்களும் அறிவு சார்ந்த தீர்மானங்களாக இருக்க வேண்டும்.
காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும். அதற்கான பரிகாரங்கள் காணப்பட வேண்டும்.
ஆனால் அவ்வாறான உண்மைகளையும் பரிகாரங்களையும் எவ்வாறு – எங்கிருந்து பெற்றுக் கொள்ளப் போகின்றோம் என்பது தொடர்பில் அறிவு சார்ந்து தீர்மானிக்க வேண்டும்.
காணாமல் போனோருக்காக மேற்கொள்ளுகின்ற முயற்சிகள் இந்த நாட்டில் கௌரவத்துடன் வாழவேண்டிய காணாமல் போனோரின் பிள்ளைகளையும் சகோதர்களையும் பாதிக்கும் வகையில் அமைந்து விடக் கூடாது என்பதை ஒவ்வொருவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
குறித்த கவனயீர்ப்பு போராட்டங்களின் பின்னர் அனுப்பப்பட்ட மகஜர் அனைத்தும் சர்வதேச சமூகத்தினை நோக்கியதாகவே இருந்தது.
தமிழ் மக்கள் விவகாரத்தில் சர்வதேசத்தின் வகிபாகம் என்பது தமிழர் தரப்பின் எதிர்பார்ப்புக்களை நிறைவேறும் வகையில் அமையவில்லை. அல்லது சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலை தமிழர் தரப்பு சரியாக கையாளவில்லை என்பது வரலாற்று அனுபவமாக இருக்கையில், என்ன நம்பிக்கையில் தமிழர் தரப்பு தொடர்ந்து சர்வதேசத்தினை எதிர்பார்க்கின்றது எனபது சத்தியமாக புரியவில்லை.
இலங்கையில் பலமான ஆட்சியொன்று அமைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர், காணாமல் போனோரின் உறவினர்களை சந்தித்து கலந்துரையாடுவதற்கு தயாராக இருப்பதாக இந்த வருட ஆரம்பத்தில் வெளிப்படையாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமரின்
குறித்த கருத்தை கெட்டியாக பிடித்து முன்னர்த்தும் வகையில் அல்லது பந்தை அவர்களின் கால்களுக்குள் தட்டி விடும் வகையில் இன்றைய போராட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்குமாயின் ஆரோக்கியமானதாக இருக்கும். காணாமல் போனோர் விவகாரத்தினை ஏதோவொரு முடிவு நோக்கி முன்னகர்த்துவதாக அமைந்திருக்கும்.
மாறாக, விடை தர முடியாத சர்வதேச கூச்சல்கள் தென்னிலங்கையுடனான இடைவெளியை உறுதிப்படுத்தும் ஒரு சம்பவமாகவும் இனவாதிகளுக்கு தீனியாகவும் ஊடகங்களுக்கு செய்தியாகவும் மாத்திரம் அமைந்திருக்கிறது.
ப.ஶ்ரீகாந்த்