1977ல் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்ட ஒற்றுமையை சிதைத்த பெருமை அன்றைய தமிழ் காங்கிரஸின் ஒரு சிலருக்கு இருந்தது.
அதன்பின் பாராளுமன்றத்துக்கு தெரிவாகிய கூட்டணியை பழிகூறி அவர்கள் பாராளுமன்றத்தில் சொகுசான வாழ்க்கையை நடத்துகிறார்கள். கேட்டது தமிழீழம் வாங்கினது ஜப்பான்ஜீப் என்று கூறி பலருடைய வாகனங்களையும் கடத்தி பேச்சுவார்த்தை சரிவராது – பாராளுமன்றமும் தேவையில்லை என்று சொல்லி ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்து ஒன்று பலவாகி எல்லாருமே மக்களை துப்பாக்கிமுனையில் வெருட்டி எந்த ஒரு வார்த்தைகூட பேசவிடாது தடுத்து எமக்காகப் போராடி தமக்குள் அடிபட்டு சாதாரண மக்களையும் தங்களுடன் சேர்ந்த இளைஞர்களையும் கொன்று குவித்து விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி யார் அரசிடமிருந்து அதிக வசதிவாய்ப்புக்களை பெற்றுக் கொள்ள முடியுமோ அந்த வகையில் துணைக்குழுக்களாக செயற்பட்டு இன்று இந்தளவில் எம்மைக் கொண்டுவந்து நிறுத்திய பெருமைக்குரியவர்கள் – மக்களுக்காக என்ன செய்தார்கள்?
2009 யுத்தம் நடைபெற்ற பின் சுவிற்சர்லாந்து நாட்டில் 19.11.2009 தொடக்கம் 22.11.2009 வரை இலங்கைத் தமிழ்பேசும் கட்சிகளின் தலைவர்களின் சந்திப்பு நடைபெற்றது.
தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிறேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்க்கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) பொதுச்செயலர் தி.சிறீதரன், ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்த சி. நந்தகுமார், கிழக்கு முதல்வர் சி.சந்திரகாந்தன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலர் ஹசன் அலி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலர் ஆறுமுகம் தொண்டமான், மலையக மக்கள் முன்னணியின் பெ. சந்திரசேகரன், அமைச்சர் ரிசாத் பதியுதீன், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஒற்றுமைக்காக தமிழ்பேசும் பிரதிநிதிகள் சந்தித்து அந்தக் கூட்டத்தின் இறுதியில் ஒற்றுமைக்கான தேவையையும் நீடித்த தீர்வுக்கான ஒருமித்த கருத்தையும் தமிழ்ப் பேசும் கட்சிகள் அங்கீகரிக்கின்றன என்று தீர்மானம் நிறைவேற்றிய பின் நாடு திரும்பியதும் பழைய குருடி கதவைத் திறவடி என எல்லாரும் தம் இஷ்டத்துக்கு நடையைக் கட்டினார்கள்! அவர்களை நம்பி இனி ஒருபோதும் ஒற்றுமைபற்றி எவரும் வாயைத் திறக்காமல் இருப்பது நல்லது என்பது எனது தாழ்மையான கருத்து மக்கள் கொல்லப்பட்டு 11 வருடமாகியும் தம்தம் பிதற்றல்களை கூறி தமக்கு பதவிக்காக வாக்கை சேர்க்கின்றார்களேயன்றி ஒட்டுமொத்த தமிழனுக்காக எவரும் பேச இயலாத நிலையே இன்று தொடர்கிறது. இதற்குள் இன்னொரு செய்தி புதிதாக இன்று கிடைத்திருக்கிறது உலகத்திலுள்ள தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் ஒன்று படவேண்டுமாம்.
இங்குள்ளவர்கள் தமக்கு கிடைத்தது லாபம் என்றிருக்கும் நிலையில் இவரகளுடன் சேரந்தால் இன்னும் எம்மினம் என்ன செய்யப் போகிறதோ? கடவுள்தான்……
தங்க. முகுந்தன்