யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை ஆகியவற்றின் அதிகாரங்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் அணி கைப்பற்றியிருக்கின்றது. இதற்கு ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் நகர்வு பிரதான காரணமாக அமைந்திருக்கின்றது.
இவை தமிழ் அரசியல் பரப்பில் ஒரு வகையான பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இதுதொடர்பான விவாதங்கள் பல்வேறு தளங்களிலும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையினால் மணிவண்னணுக்கு இழைக்கப்பட்ட துரோகத்திற்கு தரமான பதில் வழங்கப்பட்டுள்ளதாக யாழின் புதிய மேயருக்கு ஆதரவான தரப்புக்கள் புளங்காகிதம் அடைந்து வருகின்றன.
அதேவேளை, ‘மணிவண்ணன் கொள்கையில் இருந்து மாறிவிட்டார்’ என்று அவரைக் கட்சியில் இருந்து வெளியேற்றுவதற்கு சொல்லப்பட்ட காரணம் நிரூபிக்கப்பட்டு விட்டது என்ற கோணத்தில் கஜேந்திரன்களுக்கு ஆதரவானவர்களின் வாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
மறுபுறத்தில் குறித்த சம்பவங்களுக்கு தரமான பங்களிப்பினை வழங்கிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளும் சலசலப்புக்களையும் புறுபுறுப்புக்களையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. மணியின் கடந்த காலக் கருத்துக்களும் சேறுவாரி பூச்சுக்களும் இதற்கு காரணமாக இருக்கின்றது.
மணிவண்ணனை ஆதரிப்பதற்கு தமது தலைமை தீர்மானித்தமைக்கான காரணத்தை புரிந்து கொள்ள முடியாமல் ஈ.பி.டி.பி.யின் மாநகர சபை உறுப்பினர்கள் பலரே தலையை பிய்த்துக் கொண்டிருப்பதாக தெரிகின்றது.
யுத்த நடைபெற்ற காலகட்டத்தில், ஈ.பி.டி.பி. தலைமையின் நடமாட்டங்கள் இறுதிக் கணம் வரை மெய்ப்பாதுகாவலர்களுக்கே தெரிவிக்கப்படுவதில்லை. அந்தளவிற்கு இரகசியமான நகர்வுகளை மேற்கொள்வதும் – ஏனையவர்கள் என்ன நடக்கிறது என்று கிரகிப்பதற்குள் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதும் ஈ.பி.டி.பி. தலைமைக்கு கைவந்த கலை.
இந்த வழிமுறையையே மணிவண்ணனை மேயராக்குவதற்கும் ஈ.பி.டி.பி. தலைமை கையாண்டிருப்பதாக தெரிகின்றது.
எனினும், இந்த தீர்மானத்தின் நோக்கம் ஈ.பி.டி.பி. தலைமையின் அரசியல் அனுபவத்தையும், கிடைக்கின்ற சந்தர்ப்பங்கள் அனைத்தும் மக்கள் பலனடையும் வகையில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பதில் இருக்கின்ற அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கின்றது.
மக்கள் நலன்சார் வேலைத் திட்டங்களில் அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பால் தமிழ் தலைமைகள் ஒன்றிணைய வேண்டும் என்று அண்மைக்காலமாக ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகின்றார்.
வெறும் பேச்சளவில் மாத்திரமன்றி, கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குபற்றியிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரின் கருத்துக்ளையும் உள்வாங்கிச் செயற்பட்டிருந்தார்.
அதேபோன்று, உள்ளுராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டத்தினை எதிர்த்து வாக்களிப்பது என்பது கட்சியின் பொதுவான தீர்மானமாக இருந்த போதிலும், அதிகாரத்தில் இருந்தவர்களின் கடந்த காலச் செயற்பாடுகளையும் எதிர்காலத்திற்கான திட்டங்களையும் மதிப்பீடு செய்து தீர்மானங்களை மேற்கொள்ளுவதற்கான அதிகாரங்களை உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியிருந்தார்.
இவ்வாறான பின்னணியில், வரவு செலவுத் திட்டத்திற்கு ஈ.பி.டி.பி. கட்சியின் ஆதரவின்மையினால் பதவி இழந்த யாழ். மாநகர சபை மேயர் மற்றும் நல்லூர் பிரதேச சபை ஆகியவற்றிற்கான புதியவர்களை தெரிவு செய்வதிலும் ஈ.பி.டி.பி. கட்சியின் தலைமை தன்னுடைய நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளது.
மத்திய அரசாங்கத்தில் செல்வாக்கு மிக்க சிரேஸ்ட அமைச்சராக இருக்கின்ற நிலையில், தொடர்ச்சியாக வரவு செலவுத் திட்டங்களை தோற்கட்டிப்பதன் மூலம் விசேட ஆணையாளரின் ஆட்சியை ஏற்படுத்தி தனது ஆளுகையை செலுத்தக் கூடிய சட்ட ஏற்பாடு இருக்கின்ற போதிலும், அவ்வாறான நகர்வினை மேற்கொள்ளாது. புதியவர் ஒருவர் முன்வருகின்றார் – சந்தர்ப்பத்தினை வழங்கி பார்ப்போம் என்ற எதிர்பார்ப்பே குறித்த தீர்மானமாக அமைந்திருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
இந்நிலையில், அமைச்சர் டக்ளஸின் ஆசீர்வாதத்துடன் பதவிக்கு வந்த மேயர் மணிவண்ணன், பதவியேற்றவுடன் திலீபனின் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்தியதாக வெளியான செய்தி, சமூக ஊடகங்களில் பரவலான வாதப் பிரதிவாதங்களையும் ஈ.பி.டி.பி. கட்சிக்குள் சாதுவான புறுபுறுப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிகின்றது.
இங்கே புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயம் என்னவெனில், கிடைக்கின்ற அதிகாரங்களை சரியான முறையில் மக்கள் பயனடையும் வகையில் செயற்படுத்த வேண்டும் என்ற நோக்கில மணிவண்ணனுக்கும் நல்லூரில் மயூரனுக்கும் ஈ.பி.டி.பி. ஆதரவளித்திருக்கின்றதே தவிர, கொள்கை ரீதியான உடன்பாடு இரண்டு தரப்பினருக்கும் இடையில் ஏற்படுத்தப்படவில்லை – எக்காலத்திலும் கொள்கை ரீதியில் உடன்பாடு ஏற்படுத்தவும் முடியாது – இரண்டுமே வேறுவேறு திசையானவை.
எனவே, மணிவண்ணன் திலீபனுக்கு அஞ்சலி செலுத்துவது, தேசியம் தேசியம் என்று உணர்ச்சி கொப்பளிக்க வெளுத்து வாங்குவது – அவ்வளவு ஏன், ‘ஈ.பி.டி.பி.யின் ஆதரவைப் பெற்றுக் கொண்டதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்று பிரபாகரனின் படத்தின் முன்னால் மணிவண்ணன் தோப்புக் கரணம் போட்டுக் கொண்டார் என்று செய்திகள் வெளியாகினால்கூட அலட்டிக் கொள்வதில்லை. அது அவர்களின் அரசியல் சார்ந்த விடயம் என்ற மனநிலையிலேயே ஈ.பி.டி.பி.யின் தலைமை இருப்பதாக தெரிகின்றது.
இவ்வாறான புரிந்துணர்வு மணிவண்ணன் தரப்பிலும் இருக்கும் – இருக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
எதிர்பார்க்கப்படுவது போன்று, சம்மந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும், தமிழ் மக்களின் வரலாற்று முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் யாழ் மாநகர சபையின் செயற்பாட்டில், யாருடைய அரசியல் கொள்கைகளையும் சீண்டாத வகையில் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்படுவார்களாயின், எஞ்சியிருக்கின்ற காலம் யாழ். மாநகரக்கு இனிதான காலமாக அமையும். – தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா சொல்லியிருப்பது போன்று, இன்னுமொரு துரையப்பாவாக யாழ்ப்பாண வரலாற்றில் மணிவண்ணன் இடம் பிடிக்கவும் முடியும்.
ஶ்ரீகாந்த் பன்னீர்செல்வம்